Thursday 11 September 2014

சங்கராபரண அடமானம் !!

தங்கத்தை அடகு வைக்கக் கேட்டிருக்கிறோம் ! நிலத்தை அடமானம் வைக்கக் கேட்டிருக்கிறோம் !!

ஒரு ராகத்தை அடமானம் வைத்ததைக் கேள்விப்பட்டதுண்டா ?!

வைத்திருக்கிறார்கள் என்கிறார் தமிழ்த் தாத்தா !!

தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் தன் வரலாற்று நூலான " என் சரித்திரம் " ஜகப் பிரசித்தமானது !. ஆனால் , அவர்களின் உரைநடை நூல்கள் , அவரது " என் சரித்திரம் " போல எல்லோராலும் அறியப்படாது இருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயம் ...மறுபதிப்பு அவசியம் காணவேண்டிய நூல் !!..பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவரது காலத்திலும் , அவருக்கு முன்பும் நடைபெற்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த உரைநடை நூல்களில் காணலாம் .

அதில் ஒன்று தான் இந்த ராகத்தை அடமானம் வைத்த நிகழ்ச்சியும் !

நரசையர் ( நரசிம்ஹ ஐயர் ) என்கின்ற இசைக் கலைஞர் தஞ்சாவூர் அரசவையில் கச்சேரி செய்யும் போது , அவர் பாடிய சங்கராபரணம் ராகத்தின் அழகில் மயங்கிய அரசர் அவருக்கு , " சங்கராபரணம் " நரசையர் என்று பட்டம் அளித்தாராம் !

ஒருமுறை , அவருக்கு அவசரத் தேவை ஏற்பட்டு விட்டது .

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் இசைக் கலைஞர்களைப் பெருமளவில் ஆதரித்து ஊக்குவித்த பெரும் செல்வந்தரான கபிஸ்தலம் இராமபத்திர மூப்பனார் அவர்களைச் சென்று பார்த்தார். வழக்கமான உபசரிப்புகள் முடிந்தது .

" ஐயா , எனக்கு ஒரு அவசரத் தேவை ..கொஞ்சம் கடன் வேண்டி இருக்கிறது "

" கடனா ? எவ்வளவு தேவையாய் இருக்கிறது ?"

" எண்பது பொன் "

" சரி , கடனாகக் கேட்கிறீர்களே ! எதையாவது அடமானமாக வைப்பீர்களா ?"

" என்னிடத்தில் இருக்கும் ஒரு ஆபரணத்தை வைக்கிறேன் "

" அப்படியா ? சரி ..காட்டுங்கள் ! பார்க்கலாம் !"

" ஐயா , அதைப் பார்க்க முடியாது ...காதால் கேட்டு மகிழலாம் ! "

" என்ன அது ?"

" என் சங்கீதத்திற்கு ஆபரணமான " சங்கராபரணம் " தான் ! ...உங்கள் கடன் அடைக்கும் வரை நான் எந்த மேடையிலும் அதைப் பாடமாட்டேன் !!! "

காலம் ஓடியது ...நரசையர் கடன் அடைபடவும் இல்லை ..அவரும் " சங்கராபரணத்தை " எங்கும் பாடவும் இல்லை !

ஒருமுறை , கும்பகோணத்தில் இருந்த அப்புராயர் என்ற கனவான் வீட்டுத் திருமணம் ..அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் செல்வாக்கோடு இருந்தவர் அவர் ! வாலீஸ் துரைக்கு வேண்டியவர் என்பதால் , "வாலீஸ் அப்புராயர் " என்றே அழைக்கப் பட்டவர்!

விழாவில் நரசையர் பாட்டு! அவருக்கே உரித்தான "சங்கராபரணம் " பாடச் சொன்னார் அப்புராயர் !

நரசையர் மறுத்துவிட்டார் !!

அப்புராயர் ஏன் என்று கேட்க , ராகத்தை அடமானம் வைத்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது !

ராயர் உடனே கடன் தொகையை வட்டியோடு மூப்பனாருக்குக் கொடுத்தனுப்பி கடன் விடுதலையைக் கையோடு வாங்கி வர ஆளனுப்பி விட்டார் .

ஆனால் , நடந்தது என்ன தெரியுமா ?

மூப்பனார் தாமே குடந்தைக்கு வந்துவிட்டார் !

ராயர் கொடுத்த தொகையையும் , விடுதலை முறியையும் திரும்பக் கொடுத்ததோடு மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் தொகையும் கூடுதலாகக் கொடுத்து விட்டு சொன்னாராம் ....

" நரசையர் எவ்வளவு வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுப் பெற உரிமை உள்ளவர் . அவரைப் போன்ற கலைஞர்களை ஆதரிப்பதற்குத்தானே என்னிடம் செல்வம் இருக்கிறது ..அப்படி இருக்கையில் அவர் கடனாகக் கேட்டது எனக்கு சிறிது மன வருத்தம் அளித்துவிட்டது...எனவே , விளையாட்டாக அடகு இருக்கிறதா என்று கேட்டேன் ..அவரும் " சங்கராபரணத்தை " அடகு வைப்பத்தாகச் சொன்னார் ..இதுகாறும் அவர் எங்குமே அவர் அதைப் பாடவில்லை ...எவ்வளவு உயர்ந்தவர் !! அவருடைய வாக்கு எப்பேற்பட்டது ! "

கடன் அடைபடாத வரை சங்கராபரணம் பாடாத நரசையரின் வாக்குச் சுத்தத்துடன் ,வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்தாலும் அதை வேண்டாமென்று சொல்லித் தாமே கூடுதலாயும் தொகை அளித்த இராமபத்திர மூப்பனாரின் வள்ளன்மையும் குடந்தையில் அன்று விளங்கியது !

மறுநாள் ராயர் வீட்டுக் கல்யாணத்தில் " சங்கராபரணம் " ஜொலித்தது என்று சொல்லவும் வேண்டுமோ ! 

1 comment: